பதஞ்சலி யோகசூத்திரம்




யோக சூத்திரங்களின் முக்கியத்துவம் என்னவென்றால் பலகாலமாகவே ஒரு வழிமுறையாக கடைப்பிடிக்கப்பட்ட யோக முறைகளை வகுத்து தொகுத்து அளித்தமைதான் . அதைவிட முக்கியமானது ஒன்று உண்டு. யோக முறைகள் அவருக்கு முன்பாக ஏறத்தாழ எல்லா கருத்தியல்தரப்புகளாலும் பலவிதமாக கடைப்பிடிக்கப்பட்டன. பதஞ்சலியே அவற்றைத் தொகுத்து பொதுவான அம்சங்களை மட்டும் கொண்டு யோகம் என்ற தனித்த அமைப்பை உருவாக்கினார் . அம்மரபு எந்த மதத்துக்கும் சொந்தமில்லாமல், அதே சமயம் அனைத்து மதத்துக்கும் பொதுவானதாக இருக்கும்படி அமைத்தது அவரது சாதனையே. ஒற்றை வரியில் சொல்லப்போனால் 'மதசார்பற்ற புறவயமான நிர்ணயங்களாக' யோக சூத்திரங்களை அமைத்ததே பதஞ்சலி முனிவரின் பங்களிப்பாகும்.

Click here for Tamil Audio
https://www.poornalayam.org/classes-recorded/vedantic-texts/yoga-sutra/
சமாதி பாதம்
1.   இதோ யோக விளக்கம்
2.   மன அலைகளைக் கட்டுப்படுத்துவதே யோகம்
3.   யோகத்தால் யோகி தன்னியல்பில் ஆழ்ந்திருக்கிறான்
4.   மற்ற நேரங்களில் அலைகளே இயல்பென நினைத்து விடுகிறான்
5.   அலைகள் ஐவகை, வலியுள்ளவை, வலியற்றவை
6.   மெய்யறிவு, பொய்யறிவு, கற்பனை, உறக்கம், ஞாபகம்
7.   பட்டறிவு, யூகம், நூலறிவே மெய்யறிவு
8.   அஞ்ஞானம், பொய்யியல்பே பொய்யறிவு
9.   பொருளில்லாமல் பொய்யாய் உணர்வதே கற்பனை
10. உணர்வின்றி ஓய்வில் ஆழ்வதே உறக்கம்
11. மாறுதலற்ற அனுபவங்களின் தொகுப்பே ஞாபகம்
12. விடாப்பிடியான பயிற்சியினால் அலைகளை ஒடுக்கலாம்
13. விடாமுயற்சி, பயிற்சி வெற்றி தரும்
14. நீண்ட காலம் நீடிக்கும் பயிற்சி வேண்டும்
15. காண்பவற்றில், படித்தவற்றில் பற்றற்றுப் பயில்வதே வைராக்யம்
16. பற்றற்று சுதந்திரமாய்ப் பயில்வதால் வரும் தூய ஆணவ நிலை
17. விளக்குதல், ஆராய்தல், அனுபவித்தல், ஒடுங்குதலே சம்பிரஜ்ஞாத சமாதி
18. பிரத்யாகாரம் பயில்வதால் பழைய பதிவுகள் மட்டுமிருக்கும்
19. பாவ சமாதியால் உடலற்ற இயல்பில் கலக்கலாம்
20. நம்பிக்கை, துணிவு, நினைவு, கவனம், உணர்வு வேண்டும்
21. அதிவேகப் பயிற்சி அதிவேகப் பலன் தரும்
22. மெதுவாய், மிதமாய், தீவிரமாயும் பயிலலாம்
23. இறைவனை தியானித்தும் பயிலலாம்
24. வலி, வினை, வினைப்பயன்களால் தீண்டப்படாத தூய ஆணவமே இறைவன்
25. அந்த எல்லையற்றது எல்லாமறிந்த விதை
26. இந்த ஆதி குருவே காலம் கடந்து கற்பிக்கிறார்
27. அவரது வாசகமே பிரணவம்
28. இதை ஜெபித்தால் இதன் அர்த்தம் உணரலாம்
29. அதனால் தூய ஆணவம் அறியலாம், தடைகளும் விலகலாம்
30. நோய், மந்த புத்தி, சந்தேகம், கவனமின்மை, சோம்பல், புலன்விழைதல், அஞ்ஞானம், நிலைப்பாடின்மை, வழுக்கல், அலைபாய்தல் இவையே தடைகள்
31. துக்கம், மனச்சோர்வு, உடல் நடுக்கம், மூச்சு வாங்குதல் இவையே பக்க விளைவுகள்
32. இவை அகல ஒரே தத்துவம் பயில்க
33. நட்பு. கருணை. இனிமை, சுக துக்கம் - பாவ புண்ணியத்தை சமமாய்க் கருதுதல் - இவற்றை பாவித்தால் சித்தம் தெளிவாகும்
34. ரேசக கும்பகத்தால் பிராணனை உணரலாம்
35. உணர்வுகள் மேம்பட்டால் மனம் திடப்படும்
36. ஜோதி வடிவான மதியினால் சோகம் நீங்கும் – சோகம் அடங்க ஜோதி வடிவான மதியை உணரலாம் – ஆன்ம ஜோதியை அனுபவித்தால் மன அமைதி
37. ஆசையற்ற நிலையிலும் மன அமைதி – ஆசையற்ற நிலையில் சித்தம் உணரலாம்
38. உறக்கம், கனவின் ஞானம் அறிதுயிலில் கிட்டும்
39. எதை வேண்டுமானாலும் தியானிக்கலாம்
40. அதனால் அணு முதல் அண்டம் வரை அடக்கலாம்
41. அலைகள் அடங்கினால் தூய படிகமாகும் மனம், காண்பவன், காண்பொருள், காட்சி கலந்திடும், சமாதி உண்டாகும்
42. பெயர், பொருள், அறிவு மூன்றும் காண்பது சவிதர்க்க சமாதி
43. நினைவு தூய்மையாகி, பொருளை மட்டும் காண்பது நிர்விதர்க்க சமாதி
44. சூட்சும உடலைக் காண்பது சவிசார சமாதி, காணாதது நிர்விசார சமாதி,
45. சூட்சும உடலை தியானித்தால் காரண உடலை அறியலாம்
46. இந்நான்கு சமாதிகளும் விதை உள்ளவை
47. நிர்விசார நிலை கடந்தால் தூய ஆன்மா சுடர்விடும்
48. உண்மை உணரும் உள்ளுணர்வு
49. கேள்வி, அனுமான அறிவெல்லாம் வெளித்தோற்றம் பற்றியவை
50. இந்த ஞானத்தால் பழைய, புதிய அலைகள் ஒடுங்குகின்றன
51. இதுவரை பெற்ற யோக அனுபவங்கள்கூட நீங்கிய நிலையே நிர்பீஜ சமாதி
சாதனாபாதம்
1.   தவம், தன்னறிவு, சரணாகதியே கிரியா யோகம்
2.   சமாதியை பாவித்தால் துன்பங்கள் அகலும்
3.   துன்பம் ஐவகை: அறியாமை, ஆணவம், ஆசை, வெறுப்பு, மரண பயம்
4.   பேதமை, பலவீன, கட்டுப்பட்ட, செயல்படும் நிலைகளில் அறியாமையே பிற துன்பங்களுக்கும் காரணம்
5.   நிலையற்றதை நிலையென, களங்கமானதை களங்கமற்றதென, துக்கத்தை சுகமென, மாமிசத்தை ஆன்மாவென நினைப்பதே அறியாமை
6.   பார்க்கும் புலனை பார்ப்பவனாய்ப் பார்ப்பதே ஆணவம்
7.   சுகத்தினால் விளைவதே ஆசை
8.   துக்கத்தினால் விளைவதே வெறுப்பு
9.   ஞானிகளுக்கும் உண்டு மரணபயம்
10. துன்பங்களை சூட்சும வடிவில் அழிக்கலாம்
11. தியானத்தால் துன்பங்களை அழிக்கலாம்
12. வினைப்பதிவான துன்ப விதை இப்பிறவியிலோ மறுபிறவியிலோ முளைவிடும்
13. பிறவி, ஆயுள், ஆசிகளுக்கு விதைகளே காரணம்
14. சுகதுக்கங்களுக்கு பாவபுண்ணியங்களே காரணம்
15. வினைகள் யாவும் வினைப்பதிவுகளைத் தருவதால் ஞானிகளுக்கு துக்கமே எல்லாம்
16. வெளிப்படாத துக்கத்தைத் தவிர்க்கலாம்
17. காண்பவனை காண்பொருளோடு இணைப்பதைத் தவிர்க்கலாம்
18. ஒளி, இருள், செயல் முக்குணமும் ஐம்பூதமும் ஐம்புலனால் அறியலாம்
19. வரம்பற்ற, வரம்புள்ள, அருவ, உருவ குணம் நான்கு
20. காண்பவன் தன்னைத் தான் கண்டால் காண்பதைக் காணலாம், கண் சுத்தமாகும்
21. காண்பொருள் காண்பவனைக் காட்டும்
22. காண்பொருள், அருவ நிலை அறிந்த பின்னும் அழிவதில்லை, சாதாரணமானவருக்காக
23. காண்பவன் தன்னியல்பைக் காண, காண்பொருளோடுள்ள தொடர்பு அழியும்
24. இதற்குக் காரணம் அறியாமை
25. இத்தொடர்பு அழிவதால் சுதந்திர நிலை தோன்றும்
26. இதற்கு விவேகமும் விழிப்புணர்வும் வேண்டும்
27. இறுதி நிலை ஞானத்திற்கு ஏழு படிகள்
28. யோகப் படிகளைப் பயிற்சி செய்தால், அழுக்குகள் அகலும், ஞானம் ஒளிவிடும், விவேகம் பெருகும்
29. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதியே எட்டு படிகள்
30. அகிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், உடைமையின்மையே இயமம்
31. ஜாதி, தேசம், காலம், சமய வேறுபாடின்றி, எல்லாப் படிகளுக்கும் இவை பொருந்தும்
32. சுத்தம், திருப்தி, தவம், சுயதேடல், சரணாகதியே நியமம்
33. தீய உணர்வை நீக்க எதிரானதை மேற்கொள்ளலாம்
34. எதிரானதை மேற்கொள்வதால் வன்முறை, பொறாமை, கோபம், மோகம், துக்கம், அறியாமை போன்றவற்றை நீக்கலாம்
35. அகிம்சையைக் கடைப்பிடித்தால் எதிர்ப்புகள் அகலும்
36. சத்தியத்தைக் கடைப்பிடித்தால் உழைப்பின் கனிகள் கிட்டும்
37. திருடாமையைக் கடைப்பிடித்தால் நவரத்தினங்களும் கிட்டும்
38. பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்தால் ஆண்மை பெருகும்
39. உடைமையின்மையைக் கடைப்பிடித்தால் பிறவி இரகசியங்கள் தெரியும்
40. சுத்தத்தால் தன்னுடல், பிறருடல் பற்று விலகும்
41. ஆத்ம சுத்தம் தருமே உயர் மனம், ஒரே கவனம், புலனடக்கம், ஆன்ம தரிசனம்
42. திருப்தியால் பரம சுகம் கிடைக்கும்
43. தவத்தால் உடலை, புலனை வெல்லலாம், அழுக்குகள் அகலும்  
44. சுயதேடலால் தன்னியல்பை அறியலாம்
45. சரணாகதியால் சமாதி நிலை அடையலாம்
46. உடலை உணரும் சுகமே ஆசனம்
47. இறுக்கமில்லா ஓய்வில் எல்லையில்லா ஆனந்தம்
48. இதனால் இருமை அகலும்
49. பிறகு மூச்சை ஏற்றி, இறக்கி, பூரிக்கச் செய்தலே பிராணாயாமம்
50. ஏற்றி, இறக்கி, பூரிக்கச் செய்தல் இடம், காலம், எண்ணிக்கையால் மாறும், நீளும், குறையும்
51. உள்ளே வெளியே செல்லாமல் நிற்பது நான்காவது
52. இதனால் உள்ளொளியின் திரை விலகும்
53. இதனால் தாரணைக்கு மனம் தயாராகும்
54. ஐம்புலனும் தன்னியல்பை அறிதலே பிரத்தியாகாரம்
55. இதுவே ஒப்பற்ற புலனடக்கம்
விபூதி பாதம்
3.1 ஓரிடத்தில் கவனம் செலுத்துவதே தாரணை
3.2 அங்கே உணர்வுடன் இலயிப்பதே தியானம்
3.3 அங்கே வடிவம் மறைந்து அர்த்தம் மட்டுமே உணர்வதே சமாதி
3.4 மூன்றும் இணைவதே சம்யமம்
3.5 இவ்வெற்றி தருமே ஒளிவிடும் உள்ளுணர்வு
3.6 இவை படிப்படியாக நிகழும்
3.7 முன்னைந்து போலின்றி இம்மூன்றும் அந்தரங்கமானவை
3.8 நிர்பீஜ சமாதி இவற்றைவிட ஆழமானது
3.9 விதைகள் ஒடுங்கி அலைகள் ஏறி இறங்குதல் அடங்கும் நிலையே நிரோத பரிணாமம்
3.10 விதைகளிலிருந்தே இவ்வமைதி கிடைக்கிறது
3.11 பல்முனை சிந்தை ஒடுங்கி ஒருமுனையாவதே சமாதி பரிணாமம்
3.12 இந்த ஒருமுனை சிந்தையும் ஏறி அடங்குவதே ஏகாக்ரதா பரிணாமம்
3.13 இம்மூன்றால் உடலும் புலனும், தரத்திலும் வடிவிலும் நிலையிலும் பரிணாமம் அடையும்
3.14 அழிந்த, வளர்ந்த, மறைந்த விதைகளை யோகி தன்னியல்பில் காண்கிறான்
3.15 வரிசை மாறுபாடே பரிணாம மாறுபாட்டிற்குக் காரணம்
3.16 முப்பரிணாமத்திலும் சம்யமம் செய்தால் கடந்த, எதிர்காலம் அறியலாம்
3.17 ஒலி, அர்த்தம், பதிவுகள் ஒன்றுபட்டிருந்தாலும், வேறுபாட்டில் சம்யமம் செய்தால் எல்லா மொழியும் அறியலாம்
3.18 விதைகளை ஆழ்ந்து ஆராய்ந்தால் முப்பிறவி அறியலாம்
3.19 உடல் மொழியால் பிறர் மனம் அறியலாம்
3.20 அவற்றைத் தவிர அறிய முடியாதவற்றையும் அந்த அறிவே கூறும்
3.21 உடல் வடிவில் சம்யமம் செய்து உணரும் சக்தியைத் தடுத்தால் பார்வை ஒளியற்று மறையலாம்
3.22 இதேபோல் சப்தம் உட்பட அனைத்தும் மறையலாம்
3.23 விரைவாய் மெதுவாய் பலன்தரும் வினையின் சம்யமம் மரண ஞானம் தரும்
3.24 நட்பு தரும் பலம்
3.25 யானையின் பலம் வரும்
3.26 உச்சந்தலை ஒளியால் புலப்படாத, மறைந்த, தொலைவிலுள்ளவற்றைப் பார்க்கலாம்
3.27 சூரிய சம்யமம் உலக ஞானம்
3.28 சந்திரனால் விண்மீன் ஞானம்
3.29 துருவத்தால் அவ்வழி ஞானம்
3.30 நாபிச் சக்கரத்தால் உடல் ஞானம்
3.31 விசுத்தியால் பசி, தாகம் வெல்லலாம்
3.32 கூர்ம நாடியால் அசையா நிலை
3.33 உச்சந்தலை ஒளியால் சித்தர்களின் தரிசனம்
3.34 உள்ளுணர்வால் சகல ஞானம்
3.35 இருதயத்தால் சித்த ஞானம்
3.36 சத்துவமும் புருஷனும் முற்றிலும் வேறானவை, வித்தியாசத்தை உணர முடியாது, உணர்ந்தால் புருஷனை அறியலாம்
3.37 அதனால் உள்ளுணர்வால் வாசம், சுவை, பார்வை, தொடுகை, ஒலியை உணரலாம்
3.38 இவை சமாதிக்குத் தடைகள், உலகிற்கு கொடைகள்
3.39 பந்தங்களின் தளைகள் நெகிழ, சித்தத்தின் வாசல் தெரிய, பிறர் உடல் புகலாம்
3.40 உதானனை வென்றால், நீரில், சேற்றில், முள்ளில் நடக்கலாம், பறக்கலாம்
3.41 சமானனை வென்றால் ஒளி பெருகும்
3.42 செவிக்கும் ஆகாயத்திற்குமுள்ள தொடர்பை உணர்ந்தால் தேவ ஒலி கேட்கலாம்
3.43 உடலுக்கும்  ஆகாயத்திற்குமுள்ள தொடர்பை உணர்ந்தால் பஞ்சு போலாகிக் காற்றில் மிதக்கலாம்
3.44 புறவடிவம் வெளித்தோற்றமே என உணர்ந்தால் உடலற்ற உன்னத நிலை உருவாகும், ஒளியுடலின் திரைகள் விலகும்
3.45 தூல, சொரூப, சூட்சும, தொடர்பு, நோக்கங்களின் சம்யமத்தால் ஐம்பூதங்களை வெல்லலாம்
3.46 அதனால் அட்டமா சித்திகளும், உடல் செல்வமும், அழிவற்ற தன்மையும் வரும்
 3.47 அழகு, கவர்ச்சி, பலம், உறுதி, தாங்கும் சக்தி இவ்வைந்தே உடல் செல்வம்
3.48 உணர்வது, இயல்பு, அகந்தை, தொடர்பு, நோக்கம் இவற்றில் சம்யமம் செய்ய புலன் வெற்றி உண்டு
3.49 அதனால் மனோவேகம், கருவியின்றி புலனுணர்வு, இயல்பின் வெற்றி பெறலாம்
3.50 சத்துவத்திற்கும் புருஷனுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தால் சர்வ வல்லமையும் சர்வ ஞானமும் பெறலாம்
3.51 அந்த வைராக்கியத்தால் தீய வித்தும் அழிய கைவல்யம் பெறலாம்
3.52 தேவ அழைப்புகளால், கவர்ச்சிகளால் மயங்காதே! மறுபடியும் தேவையற்ற பந்தத்தில் சிக்காதே!
3.53 கண வரிசையில் சம்யமம் விவேக ஞானம்
3.54 ஜாதி, இலட்சண, தேச வேறுபாடு காண முடியாவிட்டாலும் இதனால் அறியலாம்
3.55 எல்லா விஷயமும் எல்லா முடிவுகளும் கடந்த ஞானம் இது
3.56 சத்துவமும் புருஷனும் தூய்மையால் ஒன்றானால் கைவல்யம்
கைவல்ய பாதம்
4.1 பிறப்பால், மருந்தால், மந்திரத்தால், தவத்தால், சமாதியால் சித்தி பெறலாம்
4.2 உயிரின் பரிணாமம் இயற்கையின் செயல்
4.3 பாவபுண்ணியங்கள் இயற்கையை மாற்றுவதில்லை, விவசாயியைப் போல  தடையை விலக்குகின்றன
4.4 காய வியூகத்தை உண்டாக்குவது அகந்தைதான்
4.5 வெவ்வேறு வேலைகள் செய்தாலும் இவற்றை இயக்குவது ஒரு மனம்தான்
4.6 இவற்றில் தியானத்தில் பிறந்தது விதையற்றது
4.7 யோகியின் கர்மம் வெள்ளை, கறுப்பு இரண்டுமில்லை, பிறருக்கு மூன்றாயிருக்கும்
4.8 இவை பொருத்தமான சூழலில் வெளிப்படும், இல்லையெனில் மறைந்திருக்கும்
4.9 இவை ஜாதி, தேசம், காலத்தால் பிரிக்கப் பட்டிருந்தாலும், நினைவும் விதைகளும் ஒன்றாயிருக்கின்றன
4.10 வாழ்வதற்கான ஆசைக்கு எல்லையில்லை என்பதால் இவற்றிற்கு துவக்கமில்லை
4.11 காரணம், நோக்கம், இருப்பிடம், பொருள் – சேர்ந்துதான் அவை இருப்பதால், இவை மறைந்தால் அவையும் மறையும்
4.12 கடந்த காலமும் எதிர் காலமும் தம் இயல்பில் இருக்கின்றன, குணங்களே வெவ்வேறானவை
4.13 இவை வெளிப்பட்டாலும் மறைந்திருந்தாலும் குணங்களால் ஆனவை    
4.14 மாற்றங்களின் ஒற்றுமையே பொருட்களின் ஒற்றுமை
4.15 பொருள் ஒன்றே மனங்களே வேறுபடுகின்றன, அதனால்தான் அனுபவங்கள் வேறுபடுகின்றன
4.16 பொருள் ஒரு மனதைச் சார்ந்தில்லை, அப்படி இருந்தால் உணரப்படாவிட்டால் என்னாகும்?  
4.17 ஒரு பொருளை நாம் அறிந்தோ அறியாமலோ இருப்பதற்கு மனதில் அது ஏற்படுத்தும் பாதிப்பே காரணம்
4.18 மன அலைகள் எப்போதும் அசைந்துக் கொண்டிருப்பதால், அசையாப் பிரபுவான புருஷன் அறிந்திருக்கிறது
4.19 சுய ஒளியற்ற மனம் பார்ப்பதல்ல, பார்க்கப்படுவது
4.20 ஏனெனில் இரண்டையும் அது ஒரே சமயம் செய்வதில்லை
4.21 இன்னொரு மனதால் பார்க்கப்படுகிறது என்றால், அதைப் பார்ப்பது யார் என்ற எல்லையற்ற கேள்வி எழுகிறது
4.22 அசையா புருஷன் அருகில் புத்தி அதைப்போல் அறிகிறது
4.23 அறிபவன், அறிபொருள் அருகில் சித்தம் இருகுணம் பெறுகிறது
4.24 எண்ணற்ற பதிவுகளுள்ள சித்தம், புருஷனோடு இணைந்தே செயல்படுகிறது
4.25 இவ்வேறுபாட்டை அறிபவனுக்கு ஆத்ம பாவ, பாவனை அழிகிறது
4.26 இவ்விவேகத்தால் சித்தம் கைவல்யம் அடைகிறது
4.27 இந்த ஞானத்திற்கு விதைகளே தடைகள்
4.28 முன்கண்டவாறே இவற்றையும் ஒடுக்கலாம்
4.29 சகல ஞானத்திலும் ஆர்வமின்றி எப்போதும் விவேகத்துடன் இருப்பவனுக்கு  தர்மமேக சமாதி
4.30 பிறகு வலியில்லை, விதையில்லை
4.31 அனைத்து திரைகளும் விதைகளும் அகல, ஞானம் விரிய, இருள் சுருங்கும்
 4.32 பிறகு நோக்கம் நிறைவேற, குணங்களின் பரிணாமத் தொடர் முடியும்
4.33 பரிணாம - கணத் தொடர் முடிந்து, வரிசை உணரலாம்
4.34 புருஷ அர்த்தம் நிறைவேற, குணங்கள் உள்திரும்ப, கைவல்ய சொரூபம் வெளிப்படும், சித்தி சக்தி பெருகும்